நைஜீரியாவில் இறந்த புன்னக்காயல் மாலுமி உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்


நைஜீரியாவில் இறந்த புன்னக்காயல் மாலுமி உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Aug 2020 1:13 AM GMT (Updated: 13 Aug 2020 1:13 AM GMT)

நைஜீரியா நாட்டில் இறந்த புன்னக்காயல் மாலுமியின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் உறவினர்கள் மனு கொடுத்து உள்ளனர்.

தூத்துக்குடி, 

ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் தெற்கு தெருவை சேர்ந்தவர் வில்ஜியூஸ் லோபோ. இவர் சேர்ந்தபூமங்கலத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி லியோஜா. இவர்களுடைய மகன் வில்பன் லோபோ(வயது 21). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் ‘எம்.வி.ஹல் விட்டா‘ என்ற கப்பலில் எந்திர பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்து உள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு வில்பன் லோபோ நைஜீரியா நாட்டு கப்பலில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து விட்டதாக மும்பையில் உள்ள அலுவலகம் மூலம் தந்தை வில்ஜியூஸ் லோபோவுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த 28-ந் தேதி வில்பன் லோபோவின் உடல் கரை ஒதுங்கி உள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடவடிக்கை

இதைத் தொடர்ந்து வில்பன் லோபோவின் உறவினர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து வில்பன் லோபோவின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

Next Story