ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை ஊரடங்கால் காவடி எடுத்து செல்ல முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்


ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை ஊரடங்கால் காவடி எடுத்து செல்ல முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 13 Aug 2020 7:16 AM IST (Updated: 13 Aug 2020 7:16 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்புப்பூஜை நடந்தது. ஊரடங்கால் ரத்தினகிரி, திருத்தணி உள்ளிட்ட முக்கிய கோவில்களுக்கு காவடி எடுத்துச் செல்ல முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வேலூர், 

முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிக்கிருத்திகையும் ஒன்றாகும். இதையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி உள்பட பல்வேறு காவடிகளை எடுத்துக் கொண்டு வள்ளிமலை, ரத்தினகிரியில் உள்ள முருகன் கோவில்களுக்கு பாத யாத்திரையாக சென்று தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர்.

திருத்தணி முருகன் கோவிலுக்குச் செல்ல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். ஆடிக்கிருத்திகை அன்று கோவில்களில் சிறப்புப்பூஜைகள், இன்னிசை கச்சேரி உள்ளிட்டவை நடைபெறும். இதனால் கோவில்களில் பொதுமக்கள், பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் வள்ளிமலை, ரத்தினகிரி, திருத்தணி ஆகிய முருகன் கோவில்களில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவுக்கு தடை விதிக்கப்பட்டது. பிற மாவட்டங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ரத்தினகிரிக்கு காவடி எடுத்துச் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தங்கள் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துச் சென்று சாமி தரிசனம் செய்து, வேண்டுதலை நிறைவேற்றினர்.

முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடிக்கிருத்திகையையொட்டி நேற்று காலை 6 மணிக்கு ரத்தினகிரி பாலமுருகன் கோவில் நடை திறக்கப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார். அதைத்தொடர்ந்து காலை 7.30 மணியளவில் கோவில் பூட்டப்பட்டது. ரத்தினகிரி மலையடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்புப்பூஜை நடந்தது. சைதாப்பேட்டை வேலூர்-ஆற்சாடு சாலையில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலின் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது. பாலமதி முருகன் மலைக்கோவில், பேரி சுப்பிரமணியசாமி கோவில், தொரப்பாடி, கொசப்பேட்டை சுப்பிரமணியசாமி கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது.

Next Story