திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் - பெண் உள்பட 2 பேர் கைது


திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் - பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2020 3:15 AM IST (Updated: 13 Aug 2020 8:07 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செம்பட்டு,

கொரோனா ஊரடங்கு காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் பணி நிமித்தமாக தங்கி இருந்த இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

இவர்களை மீட்பதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வெளிநாட்டில் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகிறார்கள்.

தற்போது பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்களில் இந்தியாவுக்கு திரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி ஊரடங்குக்கு முன்பு, தங்கத்தை கடத்திவர குருவியாக வெளிநாடு சென்றவர்கள் தற்போது தாயகம் திரும்பி வருகிறார்கள். இதனால் கடந்த சில நாட்களாக விமான நிலையங்களில் கடத்தல் தங்கம் சிக்குவது அதிகரித்து வருகிறது. திருச்சியிலும் கடந்த 2 வாரங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் திருச்சிக்கு இரவு 7.40 மணிக்கு வந்தது. அதில் வந்த 177 பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அதில் வந்த 4 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள், சிவகங்கையை சேர்ந்த பாஸ்கர், ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் நூருல், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த ராஜா, மானாமதுரையை சேர்ந்த உதயன் ஆகியோர் என்பதும் அவர்கள் நகை வடிவிலும், பசை வடிவிலும் தங்கத்தை தங்கள் உடலில் மறைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 4 பேரிடம் இருந்தும் மொத்தம் ஒரு கிலோ 773 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பாஸ்கர், நூருல் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள், மற்ற 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் பசை வடிவில் இருந்ததால், அதை திருச்சி பெரியகடை வீதியில் உள்ள 2 பொற்கொல்லர்களிடம் கொடுத்து தங்கம் பிரித்து எடுத்து மதிப்பீடு செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 24 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாடுகளில் உணவின்றி, இருப்பிடமின்றி தவித்து வரும் இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர இயக்கப்படும் சிறப்பு விமானத்தில் இதுபோன்று தங்கம் கடத்துவது மிகவும் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story