குவாரியில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம் - விருத்தாசலம் அருகே பரபரப்பு


குவாரியில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம் - விருத்தாசலம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 13 Aug 2020 11:39 AM IST (Updated: 13 Aug 2020 11:39 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே குவாரியில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கம்மாபுரம், 

விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலம் மற்றும் கோபாலபுரம் கிராமத்தில் உள்ள மணிமுக்தாற்றில் தமிழக அரசு அனுமதியுடன் மணல் குவாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த குவாரியில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் ஏற்றி வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மணிமுக்தாறு அணைக்கட்டு அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணல் குவாரி தொடங்கப்பட்டு, லாரிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருத்தாசலம் பகுதி மாட்டு வண்டி தொழிலாளர்கள் அனைத்து கிராம மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் வெற்றிவேல் தலைமையில் நேற்று மாட்டு வண்டிகளுடன் அணைக்கட்டு அருகே உள்ள மணல் குவாரிக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் மணல் அள்ள தங்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று கண்டன கோஷம் எழுப்பியபடி மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், கம்மாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டைமண்ட்துரை, தனிப்பிரிவு ஏட்டு சண்முகநாதன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டுவண்டி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாட்டு வண்டி தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக எங்களுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கவில்லை. குமாரமங்கலம் கிராமத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்காக அரசு மணல் குவாரி அமைக்க அளவீடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது லாரிகளுக்கு மட்டுமே மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். அதனால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் அரசு மணல் குவாரியில் மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால் மணல் குவாரிகளில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர். அதற்கு இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தை கை விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story