கேரள மருத்துவ மாணவியிடம் ரூ.2 லட்சம் நகைகள் வாங்கி மோசடி காதலன் மீது வழக்கு


கேரள மருத்துவ மாணவியிடம் ரூ.2 லட்சம் நகைகள் வாங்கி மோசடி காதலன் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 Aug 2020 2:45 AM IST (Updated: 14 Aug 2020 2:45 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், திருமணம் செய்து கொள்வதாக கூறி கேரள மருத்துவ மாணவியிடம் ரூ.2 லட்சம் நகைகளை வாங்கி மோசடி செய்த காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பெங்களூரு, 

பெங்களூரு சோழதேவனஹள்ளி அருகே சொக்கசந்திரா பகுதியில் வசித்து வருபவர் அனீஸ் வர்க்கீஸ்(வயது 30). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அனீஸ் வர்க்கீசுக்கும், பெங்களூருவில் தங்கி மருத்துவ படிப்பு படித்து வரும் கேரளாவை சேர்ந்த 27 வயது மாணவிக்கும் இடையே கடந்த 2017-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு அனீஸ் வர்க்கீஸ் அந்த மாணவியிடம் தனது காதலலை வெளிப்படுத்தினார்.

அனீஸ் வர்க்கீசின் காதலை மருத்துவ மாணவியும் ஏற்றுக்கொண்டார். பின்னர் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்து உள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மருத்துவ மாணவியிடம், அனீஸ் வர்க்கீஸ் உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் தெரிகிறது.

காதலன் மீது வழக்கு

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென அனீஸ் வர்க்கீஸ் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். பின்னர் பெங்களூருவில் ஊரடங்கு அமலில் இருந்த போது மருத்துவ மாணவியிடம் இருந்து அனீஸ் வர்க்கீஸ் செலவுக்கு அடிக்கடி பணம் வாங்கியதாக தெரிகிறது. பின்னர் தொழில் தொடங்க உள்ளதாக கூறி மருத்துவ மாணவியிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை அனீஸ் வர்க்கீஸ் வாங்கிவிட்டு சென்றார்.

ஆனால் அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதற்கிடையே அனீஸ் வர்க்கீசுக்கும், இன்னொரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. மேலம் அந்த பெண்ணுடனேயே அனீஸ் வர்க்கீஸ் வசித்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த மருத்துவ மாணவி, அனீஸ் வர்க்கீசிடம் சென்று நகைகளை திருப்பி தரும்படி கேட்டு உள்ளார். ஆனால் அவர் நகைகளை திருப்பி தர மறுத்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் உல்லாசம் அனுபவித்ததுடன், ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகளையும் வாங்கி அனீஸ் வர்க்கீஸ் மோசடி செய்து விட்டதாக மருத்துவ மாணவி சோழதேவனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அனீஸ் வர்க்கீஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story