கொரோனாவில் இருந்து மீண்ட சித்தராமையா வீடு திரும்பினார் ஒரு வாரம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை


கொரோனாவில் இருந்து மீண்ட சித்தராமையா வீடு திரும்பினார் ஒரு வாரம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை
x
தினத்தந்தி 13 Aug 2020 9:28 PM GMT (Updated: 13 Aug 2020 9:28 PM GMT)

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார். ஒரு வாரம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட 37 மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் எடியூரப்பா கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார். இதுபோல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 3-ந் தேதி அவர் காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து, சித்தராமையாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக பெங்களூரு பழைய விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சித்தராமையா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் இருந்ததால், அதற்காக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அதே நேரத்தில் சித்தராமையாவுக்கு ரத்த அழுத்தம் சரியாக இருந்தது. கடந்த 3-ந் தேதியில் இருந்து சித்தராமையாவின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. காய்ச்சலும் குறைந்தது.

வீடு திரும்பினார்

இந்த நிலையில், சித்தராமையாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, மணிப்பால் மருத்துவமனையில் இருந்து நேற்று சித்தராமையா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். கொரோனா பாதிப்புக்கு உள்ளான சித்தராமையா கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். சித்தராமையாவுக்கு 72 வயதாவதால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இருந்தாலும், ஒரு வாரம் முழுமையாக ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையில், கொரோனாவில் இருந்து மீண்டுள்ள சித்தராமையா, மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதுபோல, தான் குணமடைய வேண்டிய மாநில மக்களுக்கும் சித்தராமையா நன்று தெரிவித்திருக்கிறார்.

Next Story