பெங்களூருவில் வன்முறை நடந்த பகுதிகளில் இயல்புநிலை திரும்புகிறது பாதுகாப்புக்கு போலீஸ் குவிப்பு
பெங்களூருவில் வன்முறை ஏற்பட்ட டி.ஜே.ஹள்ளி-கே.ஜி.ஹள்ளி பகுதிகளில் இயல்புநிலை திரும்புகிறது. இருப்பினும் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே பெங்களூருவில் நாளை(சனிக்கிழமை) வரை 144 தடை உத்தரவை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு புலிகேசிநகர் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் தனது முகநூல் பக்கத்தில் சிறுபான்மை சமுதாயனத்தினர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவு செய்ததாக தெரிகிறது. இதனால் அகண்ட சீனிவாச மூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு ஒரு தரப்பினர் தீ வைத்தனர். இதில் எம்.எல்.ஏ.வின் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.
மேலும் வன்முறையாளர்கள் கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையங்களை சூறையாடியதோடு, அந்த போலீஸ் நிலைய எல்லைகளில் உள்ள பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். மேலும் வாகனங்களை தலைகீழாக கவிழ்த்து தீ வைத்தனர். தீ வைக்கப்பட்டது மற்றும் சேதப்படுத்தப்பட்டதில் 250 வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த வன்முறையில் தொடர்புடையதாக 150 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெங்களூரு முழுவதும் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று வரை காலை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி, காவல் பைரசந்திரா ஆகிய பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.
9 பிரிவுகளில் வழக்கு
இதனால் அந்த 3 பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் தேவையின்றி வெளியே சுற்றியவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இந்த நிலையில் பெங்களூரு கலவரம் தொடர்பாக டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையங்களில் 143(சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல்), 147(கலவரம் செய்யும் நோக்கில் கூடுதல்), 148(பொதுமக்களை அச்சுறுத்தம் வகையில் கையில் ஆயுதம் வைத்திருத்தல்), 353(அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல்), 333(அரசு ஊழியர்களை கொடூரமாக தாக்கி காயம் ஏற்படுத்துதல்), 323(கம்பு, கையால் தாக்கி காயம் ஏற்படுத்துதல்) 436(பொது சொத்துகளுக்கு தீ வைத்தல்), 427(பொது சொத்துகளை சேதப்படுத்துதல்) உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 2 முக்கிய வழக்குகள் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் நேற்று இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல், கிழக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன், கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா ஆகியோர் ஒன்று கூடி வன்முறை நடந்த பகுதிகளில் இயல்பு நிலையை திரும்ப வைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இதன்பின்னர் கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
தடய அறிவியல் நிபுணர்கள்
வன்முறை நடந்த பகுதிகள் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் தற்போது அமைதி திரும்பியுள்ளது. வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையை நாங்கள் தீவிரப்படுத்தி உள்ளோம். வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறை தொடர்பாக எங்களுக்கு முக்கிய துப்பு கிடைத்து உள்ளது. ஏற்கனவே வன்முறையில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்து உள்ளோம். மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் தேடிவருகிறோம். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் நேற்று வன்முறை சம்பவம் அரங்கேறிய டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது போலீஸ் நிலையத்தில் பதிவாகி இருந்த கைரேகைகள், வன்முறையாளர்கள் பயன்படுத்திய இரும்பு கம்பிகள், பெட்ரோல் வெடிகுண்டுகள் உள்ளிட்ட சில பொருட்களை தடய அறிவியல் நிபுணர்கள் பறிமுதல் செய்து கொண்டனர். மேலும் அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
ஊரடங்கு நீட்டிப்பு
இதற்கிடையே வன்முறை சம்பவம் அரங்கேறிய டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய ஆயுதப்படை போலீசார், அதிவிரைவு படை போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் அப்பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர். அப்போது தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதுபோல பாதராயனபுரா, ஜே.ஜே.நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மத்திய ஆயுதப்படை போலீசார், அதிவிரைவு படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
பெங்களூருவில் வன்முறை நடந்ததால் ஏற்கனவே நகரில் 144 தடை உத்தரவும், டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல் பைரசந்திரா ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட உள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பெங்களூருவில் வருகிற 15-ந் தேதி வரை 144 தடை உத்தரவும், டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல் பைரசந்திரா பகுதிகளில் ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அறிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story