கொரோனா பரிசோதனைகளை குறைக்க வேண்டாம் உலக சுகாதார நிறுவன அதிகாரி வேண்டுகோள்
கொரோனா பரிசோதனைகளை குறைக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவன அதிகாரி வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரி,
உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குனர் ஜெனரல் டாக்டர் சவுமியா சாமிநாதன் நேற்று புதுச்சேரிக்கு வந்தார். சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் வார் ரூமுக்கு சென்று அவர் ஆய்வு நடத்தி கொரோனா நோயாளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுவதை கேட்டறிந்தார். அவருக்கு கோவிட் வார் ரூமின் சிறப்பு பணி அதிகாரி பங்கஜ்குமார் ஜா விளக்கினார்.
அதைத்தொடர்ந்து சட்டமன்ற வளாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை டாக்டர் சவுமியா சாமிநாதன் சந்தித்து பேசினார். சட்டமன்ற கமிட்டி அறையில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார்.
அப்போது புதுவை மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை செயலாளரும், கலெக்டருமான அருண் விளக்கி கூறினார். கொரோனா பரவலை தடுக்க அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் தெரிவித்தார். கொரோனாவை தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு டாக்டர் சவுமியா சாமிநாதன் ஆலோசனை வழங்கினார்.
கவர்னருடன் பேச்சு
பின்னர் கவர்னர் கிரண்பெடியை போனில் தொடர்புகொண்டு பேசினார். அவரிடம் டாக்டர் சவுமியா சாமிநாதன் தெரிவித்த விவரங்களை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தொற்று பாதிப்பு விவரங்களை அறிதல், சோதனை மற்றும் தடுப்பு திட்டங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும், எந்தவகையிலும் இவற்றில் எதையும் குறைக்கவேண்டாம் என்றும் சவுமியா சாமிநாதன் தெரிவித்தார். கொரோனா மட்டுமின்றி மற்ற மருத்துவ சேவைகளையும் உறுதி செய்ய கேட்டுக்கொண்டார். கொரோனா நீண்ட காலம் இருக்கும் என்பதால் மற்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இவற்றில் ஏதேனும் குறைபாடு அல்லது தளர்வு ஏற்பட்டால் அதை மாற்றுவது மிகவும் கடினமாக இருக்கும் என்றும், சிறிய வீடுகளில் தனிமைப்படுத்துவது என்பது எல்லா உறுப்பினர்களையும் பாதிக்கும்.
இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story