நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அடவிநயினார், கடனாநதி அணைகள் நிரம்பின


நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அடவிநயினார், கடனாநதி அணைகள் நிரம்பின
x
தினத்தந்தி 14 Aug 2020 12:45 AM GMT (Updated: 14 Aug 2020 12:45 AM GMT)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருக்கிறது. இதனால் அடவிநயினார், கடனாநதி அணைகள் நிரம்பின.

நெல்லை, 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 103.60 அடியாக இருந்தது. நேற்று 2 அடி உயர்ந்து 105.65 அடியாக உயர்ந்துள் ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 1,658 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து விவசாயத்துக்கு 806 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 128 அடியாக உயர்ந்துள்ளது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.65 அடியாக உள்ளது. இந்த அணைக்கு 182 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 25 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 52 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 20 கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே குண்டாறு, ராமநதி அணைகள் நிரம்பி விட்டன. இதனால் அணைக்கு வருகின்ற தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையில் நேற்று மதியம் 2 மணி அளவில் 83.20 அடியை எட்டி நிரம்பியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து 85 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு 118 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 14 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

அடவிநயினார் அணை

கடையநல்லூர் அருகே மேக்கரை பகுதியில் அனுமன் நதிக்கு குறுக்கே அடவிநயினார் அணை அமைந்து உள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 132 அடியாகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று காலையில் அடவிநயினார் அணை தனது முழு கொள்ளளவான 132 அடியை எட்டி உள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிகிறது. அணைக்கு வினாடிக்கு 287 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 27 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் கரிசல் குடியிருப்பு, பண்பொழி, இலத்தூர், ஆய்க்குடி, கம்புளி, சாம்பவர்வடகரை, சுரண்டை பகுதி குளங்களுக்கு செல்லும். இருப்பினும் பருவம் தவறி மழை பெய்ததால், கார் சாகுபடிக்கு தயாராக இருந்த நாற்றாங்கால் முழுமையாக கருகிவிட்டது. இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் தற்போது எந்த மகசூலும் செய்ய முடியாது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Next Story