நெல்லையில் சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரம்
நெல்லையில் சுதந்திர தினத்தையொட்டி, பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெல்லை,
கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போதிலும், சுதந்திர தினத்தை எளிமையாக கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில், பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அங்கு காலை 8.50 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
இந்த விழாவில் முதியோர் மற்றும் குழந்தைகள் பங்கேற்க அனுமதி இல்லை. விழாவில் அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதையொட்டி வ.உ.சி. மைதானம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அணிவகுப்பு ஒத்திகை
வ.உ.சி. மைதானத்தில் நேற்று மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் அமரும் கேலரி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதே நேரத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.
வ.உ.சி. மைதானத்தில் உள்ளே, வெளியே என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு வெடிகுண்டு கண்டறியும் தானியங்கி மெட்டல் டிடெக்டர் நுழைவுவாயில் அமைத்து, அதன் வழியாக மட்டுமே பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ரெயில் நிலையம்
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில், கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பிளாட்பாரங்கள், பொருட்கள் பாதுகாப்பு அறை, தண்டவாள பகுதியில் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மோப்ப நாய் செல்வி மற்றும் வெடிகுண்டு நிபுணர்களும் பங்கேற்றனர். நெல்லை மாநகர், புறநகர், தென்காசி மாவட்டங்களில் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முக்கிய சந்திப்புகள், வழிபாட்டு தலங்களில் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மூவர்ண முக கவசம்
சுதந்திர தின விழாவில் பங்கேற்போர் முக கவசம் அணிவது கட்டாயம் ஆகும். இதற்காக மூவர்ண தேசியக்கொடி போன்றும், இந்திய நாட்டின் வரைபடம் போன்றும் முக கவசங்கள் தயார் செய்து விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை வியாபாரிகள் ஆங்காங்கே சாலையோரத்தில் குவித்தும், கயிற்றில் வரிசையாக கட்டி தொங்க விட்டும், விற்பனை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story