ஆலங்குளம், கடையநல்லூரில் ரூ.1 கோடி புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது
ஆலங்குளம், கடையநல்லூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆலங்குளம்,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அத்தியூத்து ஆண்டிபட்டி சாலையில் தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை மற்றும் குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனை தென்காசியை சேர்ந்த பிரகாஷ் படேல் என்பவர் தொழில் செய்வதாக கூறி வாடகைக்கு எடுத்துள்ளார்.
இந்த நிலையில் தென்காசி மாவட்ட தனிப்பிரிவு போலீசாருக்கு இந்த குடோனில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து வெளிமாநிலங்களுக்கு கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆலங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள குடோனுக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ரூ.1 கோடி புகையிலை பொருட்கள்
இந்த சோதனையில், அங்கு சட்டத்திற்கு புறம்பாக புகையிலை பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங்குளம் போலீசார், குடோனில் வேலை செய்த ஆலங்குளத்தை சேர்ந்த முத்துராஜ், கழுநீர்குளத்தை சேர்ந்த ராஜகோபால் ஆகியோரை கைது செய்து குடோனில் இருந்த போலி குட்கா, புகையிலை பொருட்கள், தனியார் பீடி கம்பெனி பெயரில் லேபிள்கள் ஒட்டப்பட்ட பீடி மூட்டைகள் உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரியும் சிக்கியது. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடையநல்லூர்
இதேபோல் கடையநல்லூர் அருகே மாவடிக்கால் என்ற இடத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.2.87 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தென்காசி சன்னதி தெருவை சேர்ந்த பிரகாஷ் படேல் என்பவரை தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story