கொரோனா தாக்கம் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து - கோவில் இணை கமிஷனர் அறிவிப்பு


கொரோனா தாக்கம் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து - கோவில் இணை கமிஷனர் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2020 3:45 AM IST (Updated: 14 Aug 2020 7:35 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தாக்கம் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா ரத்து செய்யப்பட்டதாக கோவில் இணை கமிஷனர் அறிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆனி,ஆடி, ஆவணி, புராட்டாசி, தை, மாசி மாத திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதில் சித்திரை திருவிழாவில் தான் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்து, 4 மாதங்கள் அம்மன் ஆட்சி புரிவதாக ஐதீகம். அதைதொடர்ந்து ஆவணி மூலத்திருவிழாவில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு, அவர் 8 மாதங்கள் ஆட்சி புரிபவர்.

அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நடக்கிறது. அன்றைய தினத்தில் இருந்து 20-ந் தேதி வரை சந்திரசேகர் புறப்பாடு கோவிலுக்குள் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் நடைபெறும். அதன்பின்னர் 21-ந் தேதியில் இருந்து அடுத்த மாதம் 1- ந் தேதி வரை பெரிய திருவிழா நடைபெறும்.

இந்த திருவிழாவில் தான் சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் 10 திருவிளையாடல் லீலை இடம் பெற்றிருக்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவிழாவில் சுந்தரேசுவரர் சுவாமி, மீனாட்சி அம்மனுடன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி ஆவணிமூல வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மாதம் நடைபெற்ற ஆடி திருவிழா கோவிலுக்கு உள்ளேயே நடைபெற்றது.

இதற்கிடையில் ஆவணி மூலத்திருவிழாவில் கொடியேற்றம் நடந்தால் திருவிளையாடல் லீலைகள் நிகழ்ச்சி நடத்தி சுவாமி ஆவணி வீதிகளை வலம் வர வேண்டும். இதனால் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக திருவிழா நடைபெறுமா அல்லது சித்திரை திருவிழா போன்று ரத்து செய்யப்படுமா என்று அரசிடம் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான ஆவணி மூலத்திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 1-ந் தேதி வரை நடைபெற இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி திருக்கோவிலை விட்டு வெளியே சுவாமி புறப்பாட்டிற்கு தடை உள்ளது. மேலும் திருவிழாவில் திருவிளையாடல் லீலைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளது.அதனால் ஒரு லீலையை விட்டு மற்றொரு லீலையை நடத்த இயலாது. அந்த காரணத்தினால் கோவில் நடைபெற இருந்த ஆவணிமூலத்திருவிழா ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக திருவிழா நாட்களில் சுவாமி சன்னதி சேத்தி பீடத்தில் வைத்து அம்மன், சுவாமிக்கு பஞ்ச உபசார தீபாராதனை மட்டும் காலை, மாலை என இரு வேளையும் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story