சேலம் மாவட்டத்தில் 173 பேருக்கு கொரோனா தொற்று - மேலும் 4 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் 173 பேருக்கு கொரோனா தொற்று - மேலும் 4 பேர் பலி
x
தினத்தந்தி 14 Aug 2020 3:45 AM IST (Updated: 14 Aug 2020 7:50 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த 4 நாட்களில் மட்டும் கொரோனாவுக்கு 600-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் 217 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று 173 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 96 பேர், ஆத்தூரில் 20 பேர், கெங்கவல்லியில் 12 பேர், தலைவாசலில் 9 பேர், ஓமலூரில் 5 பேர், எடப்பாடி, கெங்கவல்லி, நங்கவள்ளி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், சேலம் ஒன்றியம், காடையாம்பட்டி, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், வீரபாண்டி, மேச்சேரி, மேட்டூர், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் வந்த 4 பேர், சென்னை, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,344 ஆக அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்ட போலீஸ் துறையில் பயன்படுத்தப்படும் வயர்லெஸ்கள் இயக்கத்திற்கு ஏற்காடு மலையில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொழில்நுட்ப போலீசார் கவனித்து வருகின்றனர். இங்கு பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 31 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு இதுவரை 84 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 11-ந் தேதி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கடந்த 9-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.

நாமக்கல் மாவட்டம் குறிச்சி பகுதியை சேர்ந்த 87 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 53 வயதுடைய ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 9-ந் தேதி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். தற்போது பலியாகி உள்ள 4 பேரையும் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.

Next Story