விழுப்புரம் அருகே, பூசாரி கொலை வழக்கில் மனைவி, மகள் உள்பட 3 பேர் கைது - கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்று விட்டு நாடகமாடியது அம்பலம்


விழுப்புரம் அருகே, பூசாரி கொலை வழக்கில் மனைவி, மகள் உள்பட 3 பேர் கைது - கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்று விட்டு நாடகமாடியது அம்பலம்
x
தினத்தந்தி 14 Aug 2020 5:00 AM GMT (Updated: 14 Aug 2020 4:45 AM GMT)

விழுப்புரம் அருகே பூசாரி கொலை வழக்கில் மனைவி, மகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை கொன்று விட்டு நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள வடவாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 45). சின்னக்கள்ளிப்பட்டில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவர் கடந்த 11-ந் தேதி நள்ளிரவு தனது விட்டு சமையல் அறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், தனசேகரனின் மகள் சத்யா, மனைவி ராஜேஸ்வரி(40) ஆகியோர் தனசேகரனை கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராஜேஸ்வரியும், சத்யாவும் சேர்ந்து தனசேகரனை கொலை செய்ததையும், இதற்கு சத்தியாவின் கள்ளக்காதலன் உடந்தையாக இருந்ததாகவும் போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசாரிடம் பரபரப்பு தகவலை கூறியுள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

கோவில் பூசாரியான தனசேகரனுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதனால் அவருக்கும், அவரது மனைவி ராஜேஸ்வரிக்கும் அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டில் தனசேகரனின் மகள் சத்யாவை, மயிலம் அருகே உள்ள சின்னநெற்குணத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

திருமணமான சில மாதங்களிலேயே குமாருக்கும், சத்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் குமாரின் நண்பரான புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த முருகவேல் (35) என்பவர் கட்டிட வேலை விஷயமாக குமார் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது முருகவேலுக்கும், குமாரின் மனைவி சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.

இதற்கிடையில் சத்யா கர்ப்பமானதால் குழந்தை பெற்றெடுப்பதற்காக சின்னநெற்குணத்தில் இருந்து தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அவருக்கு குழந்தை பிறந்த பிறகு குமார், வடவாம்பாளையத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்று மனைவி சத்யாவை சின்னநெற்குணம் வரும்படி அழைத்துள்ளார். அதற்கு உன்னுடன் வாழ விருப்பமில்லை என்றும், பெற்றோர் வீட்டிலேயே இருக்க விரும்புவதாகவும் சத்யா கூறியுள்ளார். சத்யாவின் தாய் ராஜேஸ்வரியும், எனது மகளை உன்னுடன் அனுப்பி வைக்க முடியாது என்று கூறி குமாரை திட்டி அனுப்பினார்.

அதன் பிறகு முருகவேல், அடிக்கடி வடவாம்பாளையத்திற்கு சென்று சத்யாவுடனான தனது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளார். இந்த விஷயம் தனசேகரனுக்கு தெரியவரவே அவர், தனது மகள் சத்யாவை கண்டித்துள்ளார். இருப்பினும் சத்யா அதனை பொருட்படுத்தாததால் முருகவேல் அடிக்கடி சத்யாவை பார்க்க வந்து சென்றார். இந்த விவகாரம் ஊர் மக்களுக்கு தெரிந்ததால் அவமானம் தாங்க முடியாமல் தீராத குடிப்பழக்கத்திற்கு ஆளான தனசேகரன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மகள் சத்யாவை அடித்து உதைத்துள்ளார். சத்யாவிற்கு ஆதரவாக செயல்பட்ட ராஜேஸ்வரியையும் அவர் அடித்து உதைத்து வந்துள்ளார்.

இதனால் தனசேகரன் உயிரோடு இருந்தால் நிம்மதியாக வாழ முடியாது என்று எண்ணிய அவரது மனைவி ராஜேஸ்வரியும், மகள் சத்யாவும், தனசேகரனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த தனசேகரன், காற்றுக்காக பின்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு சமையல் அறையில் படுத்து தூங்கினார். அப்போது தனசேகரனை அவரது மனைவி ராஜேஸ்வரியும், மகள் சத்யாவும் சேர்ந்து அரிவாள்மனை, கத்தியால் வெட்டிக்கொலை செய்தனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் தனசேகரன் அதே இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். உடனே அவர்கள் இருவரும் முருகவேலை வரவழைத்துள்ளனர். பின்னர் இந்த கொலையை மறைக்கும் நோக்கில் ரத்தக்கறை படிந்த தனசேகரனின் ஆடைகளை முருகவேல் அவிழ்த்துவிட்டு அப்புறப்படுத்தியுள்ளார். அதன்பிறகு கொலையை மறைத்துவிட்டு தனசேகரனை எலியோ, பூனையோ கடித்து குதறியதாக தாயும், மகளும் சேர்ந்து நாடகமாடியதும் போலீசாரின் தீவிர விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து ராஜேஸ்வரி, சத்யா, முருகவேல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, அரிவாள்மனை ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் 3 பேரையும் விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story