கடலூர் அருகே, கிசான் நிதிஉதவி திட்டத்தில் ரூ.12 லட்சம் மோசடி - விவசாயிகள் என்று கூறி 38 ஆயிரம் பேர் போலியாக விண்ணப்பித்தது அம்பலம்


கடலூர் அருகே, கிசான் நிதிஉதவி திட்டத்தில் ரூ.12 லட்சம் மோசடி - விவசாயிகள் என்று கூறி 38 ஆயிரம் பேர் போலியாக விண்ணப்பித்தது அம்பலம்
x
தினத்தந்தி 14 Aug 2020 10:30 AM IST (Updated: 14 Aug 2020 10:26 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே பிரதமரின் கிசான் நிதிஉதவி திட்டத்தில் ரூ.12 லட்சம் மோசடி நடந்துள்ளது. விவசாயிகள் என்று கூறி 38 ஆயிரம் பேர் போலியாக விண்ணப்பித்தது அம்பலமாகி உள்ளது.

கடலூர்,

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய், அவர்களது வங்கி கணக்கில் 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் உண்மையான விவசாயிகளின் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மாவட்ட, வட்டார அளவிலான வேளாண் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதற்காக அவர்களுக்கு ரகசிய குறியீட்டு எண் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வரை 1 லட்சத்து 79 ஆயிரம் விவசாயிகள் சேர்ந்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை புதிதாக 78 ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து சேர்ந்துள்ளனர். இதில் விவசாயிகள் இல்லாதவர்களும் தங்களை விவசாயிகள் என்று சேர்ந்து, இந்த திட்டத்தில் பயன் அடைந்து உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது.

இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூர் அருகே பிள்ளையார்மேடு, பெரியபிள்ளையார்மேடு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இல்லாத சுமார் 300 பேருடைய வங்கி கணக்கில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தலா ரூ.4 ஆயிரம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த உண்மையான விவசாயிகள், தங்களுக்கு நிதி உதவி வழங்காமல், விவசாயி இல்லாதவர்களுக்கு எப்படி நிதி உதவி வழங்கலாம் என்று சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். பின்னர் அவர்கள் மீது உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இதுபற்றி வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் விவசாயிகள் இல்லாதவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரிக்குமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, இது தொடர்பாக விசாரணை நடத்த வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி அதிகாரிகள் நேற்று பிரதமரின் கிசான் நிதிஉதவி திட்டத்தில் 4 ஆயிரம் ரூபாய் பெற்றவர்களிடம், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று உள்ளதா? எனவும், அவர்களது விண்ணப்பங்களின் உண்மை தன்மை குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 78 ஆயிரம் பேர் பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர். அதில் 38 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் போலியானவை என தெரிய வந்துள்ளது. அதில் 300 பேர் மட்டும் தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.12 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவராக கண்டறியப்பட்டதும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நிதி பெறாமல் போலி ஆவணம் வைத்து இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களின் விவரம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் விடுபட்ட உண்மையான விவசாயிகள் நேரடியாக உரிய வேளாண்மை அலுவலரிடம் சென்று ஆதார் அட்டை, சிட்டா அடங்கல், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து பட்டியலில் பெயரை இணைத்து நிதி உதவி பெறலாம் என்றார். இதேபோல் மாவட்டத்தில் மற்ற இடங்களிலும் நிதி உதவி பெற்றுள்ளார்களா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இதில் மோசடிக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளிடம் விசாரிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story