கோவையில், நாளை சுதந்திர தினவிழா - பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்


கோவையில், நாளை சுதந்திர தினவிழா - பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
x
தினத்தந்தி 14 Aug 2020 11:15 AM IST (Updated: 14 Aug 2020 11:28 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் சுதந்திர தினவிழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கோவை,

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தன்று கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் மாவட்ட கலெக்டர் கொடியேற்றி நலத் திட்டங்களை வழங்குவார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அவற்றை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை வ.உ.சி. பூங்காவில் நாளை நடக்கும் விழாவில் கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடக்கிறது. ஆனால் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கும் அனுமதி கிடையாது.

ஆனால் இந்த விழாவில் குறைந்த அளவில் அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து கலந்து கொள்வார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். தற்போது வ.உ.சி. மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவையில் ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் சுதந்திர தின விழா நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா காரணமாக பொது இடங்களில் தேசிய கொடியேற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதில் குறைந்த எண்ணிக்கையில் தான் ஆட்கள் கலந்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து கலந்து கொள்ள அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் சுதந்திர தினவிழாவையொட்டி கோவையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல கோவை மாவட்ட புறநகர் பகுதியில் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் 900 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் சிறப்பு ரெயில்கள், சரக்கு ரெயில்கள் தொடர்ந்து இயங்கப்பட்டு வருகின்றன. கோவையில் ரெயில் நிலையம் மற்றும் இருப்பு பாதை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளிலும், ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. மேலும் கோவை ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் ரெயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

Next Story