இன்று சுதந்திர தின கொண்டாட்டம் மந்திராலயாவில் நடைபெறும் விழாவில் உத்தவ் தாக்கரே தேசிய கொடி ஏற்றுகிறார்


இன்று சுதந்திர தின கொண்டாட்டம் மந்திராலயாவில் நடைபெறும் விழாவில் உத்தவ் தாக்கரே தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 15 Aug 2020 2:11 AM IST (Updated: 15 Aug 2020 2:11 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, மும்பை மந்திராலயாவில் நடைபெறும் விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இன்று காலை தேசிய கொடி ஏற்றுகிறார். விழாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், நர்சுகள் கவுரவிக்கப்படுகிறார்கள்.

மும்பை, 

இந்தியாவின் 74-வது ஆண்டு சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

முதல்-மந்திரி கொடியேற்றுகிறார்

மராட்டிய அரசு சார்பில் மும்பை மந்திராலயா வளாகத்தில் சுதந்திரதின விழா நடைபெறுகிறது. இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே காலை 9.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றுகிறார். உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு தேசிய கொடியேற்றும் முதல் சுதந்திர தினவிழா இதுவாகும்.

ஆண்டுதோறும் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பொது மக்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொள்வார்கள். மேலும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக சுதந்திர தின விழாவை எளிமையாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்து உள்ளது. எனவே இந்த ஆண்டு விழாவில் முக்கிய விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.

கொரோனாவுக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள்.

‘ஆத்மநிர்பார் பாரத்’ கோஷம்

இதேபோல மாநில அரசு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலகங்களில் காலை 9.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்ற உத்தரவிட்டுள்ளது.

அப்போது ‘ஆத்மநிர்பார் பாரத்' (தன்னிறைவு பாரதம்) என கோஷம் எழுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சுதந்திரதின கொண்டாட்ட காட்சிகளை பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஆன்லைனில் ஒளிபரப்பவும் மண்டல கமிஷனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டாக்டர்களுக்கு அழைப்பு

இதேபோல அரசு சார்பில் நடைபெறும் சுதந்திரதின விழாவுக்கு டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதாரப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் போன்றவர்களை அழைக்கவும் அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், “மக்கள் பிரதிநிதிகள், சுதந்திர போராட்ட தியாகிகள், வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருடன் டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களையும் சுதந்திர தினவிழாவுக்கு அழைக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

புனேயில் கவர்னர்

இதேபோல சுதந்திர தினவிழாக்களில் சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்பட்டு அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

புனேயில் அரசு சார்பில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கலந்து கொள்கிறார். இதேபோல ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்த பகுதி பொறுப்பு மந்திரி தேசிய கொடியை ஏற்றுவார். மந்திரிகள் வர முடியாத நிலையில் மண்டல கமிஷனர் அல்லது மாவட்ட கலெக்டர் கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு

இதேபோல தேர்தல் நடைபெறாத 15 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கொடி ஏற்றுவார்கள். மேலும் சுதந்திர தினத்தையொட்டி பொது மக்கள் அவரவர் வீட்டில் பால்கனி அல்லது மொட்டை மாடிகளில் கொடியேற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி மும்பை உள்பட மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் முக்கிய சந்திப்பு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story