செவ்வாய்க்கிழமை ஊரடங்கை மறுபரிசீலனை செய்வோம் நாராயணசாமி பேட்டி


செவ்வாய்க்கிழமை ஊரடங்கை மறுபரிசீலனை செய்வோம் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 15 Aug 2020 4:41 AM IST (Updated: 15 Aug 2020 4:41 AM IST)
t-max-icont-min-icon

செவ்வாய்க்கிழமைகளில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மறுபரிசீலனை செய்வோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நாம் 10 நாட்கள் மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கிறோம். ஆனால் மற்ற மாநிலங்களில் 6 அல்லது 7 நாட்கள்தான் கண்காணிக்கின்றனர். தற்போது தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுடன் பேசி கூடுதல் படுக்கைகள் பெறப்பட்டுள்ளன.

அதாவது லட்சுமி நாராயணா, ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தலா 300 படுக்கைகளும், மற்ற தனியார் மருத்துவ கல்லூரிகளில் தலா 200 படுக்கை வசதிகளும் அரசுக்கு பெறப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் 10 லட்சம் பேரில் 15 ஆயிரம் பேருக்குத்தான் சோதனை செய்கிறார்கள். ஆனால் நாம் 15 லட்சம் பேரில் 52 ஆயிரம் பேருக்கு சோதனை செய்துள்ளோம். தற்போது தினமும் 2 ஆயிரம் பேருக்கு சோதனை நடத்த முடிவு செய்துள்ளோம்.

கூடுதல் கவனம்

இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேவையான அளவுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் உள்ளன.

உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதிகாரியான சவுமியா சாமிநாதன் புதுவை வந்து எங்களுடன் ஆலோசனை நடத்தியபோது, ஊரடங்கினால் தொற்று பரவுவதை தடுக்க முடியாது. மக்கள் ஒத்துழைப்புதான் இதற்கு அவசியம் என்றார். ஜனவரி மாதம் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என்றும் தெரிவித்தார். தொற்று அதிகம் பரவும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும் கேட்டுக்கொண்டார்.

குறைசொல்லக் கூடாது

எனவே மக்கள் தங்களது பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதுடன் தேவைக்கு மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து அரசையோ, மருத்துவர்களையோ குறை சொல்லக்கூடாது. திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் அதிக எண்ணிக்கையில் கலந்துகொள்வதை தவிர்க்கவேண்டும்.

நகரப் பகுதியில் வசிக்கும் மக்கள் விதிமுறைகளை சரிவர கடைபிடிப்பதில்லை. இதனால்தான் நகரப் பகுதியில் அதிக அளவு தொற்று உள்ளது. எனவே அனைவரும் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும்.

மறுபரிசீலனை

புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு இருக்கும்போது புதுச்சேரியில் ஏன் செவ்வாய்க்கிழமை ஊரடங்கு? என்று கேட்கிறார்கள்.

ஒருபுறம் புதுவை மக்களின் உயிர் முக்கியம். இன்னொரு புறம் மக்களின் வாழ்வாதாரமும் முக்கியம். நாளை ஞாயிற்றுக்கிழமை நமது மாநிலத்தின் சுதந்திர தினம். இந்த நாளில் ஊரடங்கை அமல்படுத்த முடியாது. எனவே வருகிற செவ்வாய்க்கிழமை மக்களின் நடவடிக்கைகளை பார்ப்போம். அதன்பின் எங்களது முடிவினை மறுபரிசீலனை செய்வோம்.

இலவச சிகிச்சை

நமக்கு மத்திய அரசின் நிதியுதவியும் இல்லை. நிர்வாக தடைகளும் உள்ளன. இதையெல்லாம் சமாளித்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்த சூழ்நிலையை மக்கள் உணர்ந்து பார்க்கவேண்டும். மற்ற மாநிலங்களில் மக்கள் தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தி வைத்தியம் பார்க்கின்றனர். ஆனால் புதுவையில் மட்டும்தான் இலவசமாக சிகிச்சை அளிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story