செங்கல்பட்டு அருகே தொழிலாளி வெட்டிக்கொலை மகளின் காதலன் கைது
செங்கல்பட்டு அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மகளின் காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றப்பள்ளியை சேர்ந்தவர் தணிகைமணி (வயது 43). கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அதே பகுதியில் இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்த வடபாதி பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (30), தணிகைமணியின் மூத்த மகளை காலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகளின் காதல் விவகாரம் குறித்து தணிகைமணி, சிலம்பரசனை கண்டித்ததாக கூறப்படுகிறது.
வெட்டிக்கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் என 6 பேர் இறைச்சி வெட்டும் கத்தியால் தணிகைமணியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தணிகைமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மகளின் காதலன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தணிகைமணி கொலை சம்பந்தமாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே இருகுன்றபள்ளி பொதுமக்கள் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும், நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். போலீசாரின் சமரசத்தையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
கைது
இந்த நிலையில் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான வடபாதி பகுதியை சேர்ந்த சிலம்பரசன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற விஜி (45), பீ.டி. நகர் பகுதியை சேர்ந்த அக்பர் அலி என்ற அக்கு (29) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story