புதிய உயிரிழப்பு இல்லை: கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது
புதிதாக யாரும் உயிரிழக்காத நிலையில் புதுவையில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று காலை 10 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் 1,089 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 369 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 215 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில நாட்களாக நாள்தோறும் 4 முதல் 7 பேர் வரை உயிரிழந்து வந்த நிலையில் நேற்று புதிதாக யாரும் இறக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை 53 ஆயிரத்து 503 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 7 ஆயிரத்து 355 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 44 ஆயிரத்து 714 பேருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 1,853 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 1,172 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். 4 ஆயிரத்து 224 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 106 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாகி
குணமடைந்தோர் விகிதம் 57.43 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.44 சதவீதமாகும் உள்ளது. புதுச்சேரியில் 90 பேரும், காரைக்காலில் 6 பேரும், ஏனாமில் 10 பேரும் உயிரிழந்துள்ள நிலையில் மாகியில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story