நெல்லையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு
நெல்லையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற மெக்கானிக்கால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). ஏ.சி. மெக்கானிக். இந்த நிலையில் சேவியர் காலனியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி விட்டதாக கூறி, அந்த நிலத்தை மீட்டு தரக்கோரி கணேசன் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை கணேசன் சேவியர் காலனிக்கு சென்றார். அங்கு புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 60 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது அவர் ஏறினார். அவர் கையில் மண்எண்ணெய் கேனும் எடுத்து வந்திருந்தார். அங்கிருந்தவாறு கணேசன் தனது நிலத்தை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டல் விடுத்தார்.
பத்திரமாக மீட்பு
இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி கணேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அவர் கீழே குதிக்க முயன்றதால் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாய்ந்து சென்று பிடித்து அவரை பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story