நெல்லையில் சுதந்திர தின விழா: கலெக்டர் ஷில்பா தேசிய கொடியேற்றினார்
நெல்லையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஷில்பா தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
நெல்லை,
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று சுதந்திர தின விழா எளிய முறையில் நடைபெற்றது. காலை 8.50 மணிக்கு கலெக்டர் ஷில்பா கொடிகம்பத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார். ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசாரின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து 24 துறைகளை சேர்ந்த 786 பேருக்கான பாராட்டு சான்றுகளை கலெக்டர் வழங்கினார். அதனை அந்தந்த துறை உயர் அதிகாரிகள் பெற்றுச்சென்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் துறை சார்பில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் ஆறுமுகம், டவுன் உதவி கமிஷனர் சதீஷ்குமார், நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் தீபு, சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி கமிஷனர் சேகர் மற்றும் இன்ஸ்பெக்டர் கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர்க்காவல்படையினர், அமைச்சு பணியாளர்கள் என 132 பேருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. தீயணைப்பு துறையில் மாவட்ட அலுவலர் மகாலிங்கமூர்த்தி, உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த் மற்றும் நிலைய அலுவலர்கள் என 10 பேர் பாராட்டு சான்று பெற்றனர்.
பார்வையாளர்கள் இல்லை
பார்வையாளர்கள் இல்லாத சுதந்திர தின விழாவாக இந்த விழா அமைந்திருந்தது. கொரோனா ஊரடங் கால் மாணவ-மாணவிகள் மற்றும் முதியோருக்கு சுதந்திர தின விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. பெரும்பாலான பொது மக்கள் விழாவில் பங்கேற ஆர்வம் காட்டாமல் தங்களது வீடுகளில் இருந்து டி.வி.க்கள் மூலம் சுதந்திர தின விழா நிகழ்ச்சியை பார்த்தனர். இதனால் வ.உ.சி. மைதானத்தின் கேலரியில் ஒரு பகுதியில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். பெரும்பாலான கேலரிகள் பார்வையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் 2-ஆக குறைக்கப்பட்டது. அதுவும் தேச பக்தி பாடல்களுக்கு 4 பேரும், பரதநாட்டியத்தில் 5 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மிகவும் எளிமையாக விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், உதவி கலெக்டர்கள் மணீஷ் நாரணவரே, பிரதீக் தயாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை முதன்மை கல்வி அலுவலக சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கணேசன், தமிழ் ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
Related Tags :
Next Story