தென்காசியில் சுதந்திர தின விழா: கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தேசிய கொடியேற்றினார்


தென்காசியில் சுதந்திர தின விழா: கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தேசிய கொடியேற்றினார்
x
தினத்தந்தி 16 Aug 2020 6:53 AM IST (Updated: 16 Aug 2020 6:53 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தேசிய கொடியேற்றினார்.

தென்காசி, 

நாடு முழுவதும் 74-வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவானது. இதையடுத்து மாவட்டத்தின் முதல் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழா தென்காசி ஐ.சி.ஐ. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் விழா வளாகத்திற்குள் வந்தார். அப்போது அவரை மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் முன்னிலையில், கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் 8.50 மணிக்கு தேசிய கொடி ஏற்றினார். பின்னர் மூவர்ண பலூன்களை வானில் பறக்க விட்டார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சென்று, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

சான்றிதழ்கள்

சிறந்த முறையில் பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நற்சான்றிதழ் வழங்கினார். காவல்துறையைச் சேர்ந்த குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, புளியரை சப்-இன்ஸ்பெக்டர் ஞான ரூபி பரிமளா, தென்காசி சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் உள்பட 52 பேர், தென்காசி மாவட்ட அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் உள்பட 15 பேர், சங்கரன்கோவில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தைச் சேர்ந்த 22 பேர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையை சேர்ந்த ஒருவர், தென்காசி, சங்கரன்கோவில், வீரகேரளம்புதூர், கடையநல்லூர், திருவேங்கடம், செங்கோட்டை, சிவகிரி, ஆலங்குளம் ஆகிய தாலுகா அலுவலகங்களை சேர்ந்த 28 பேர், கருவூல அலுவலகத்தைச் சேர்ந்த 3 பேர், தென்காசி, புளியங்குடி, செங்கோட்டை, சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய நகராட்சி அலுவலகங்களை சேர்ந்த 25 பேர், தென்காசி மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்த 36 பேர், தென்காசி மாவட்ட பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்த 55 பேர், தன்னார்வலர்களில் பள்ளிக்கல்வித்துறையில் ஒருவர், செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் புதிய பாஸ்கர் உள்பட மூன்று தனியார் கல்லூரி நிர்வாகிகள், மாஸ் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் 31 பேர், இந்திய செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த 2 பேர், டிரைவர்கள் 3 பேர், மற்றும் 25 பேர் உள்பட 302 பேர் இந்த சான்றிதழ்களை பெற்றனர்.

Next Story