நாகையில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ரூ. 95¾ லட்சம் நலதிட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்


நாகையில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ரூ. 95¾ லட்சம் நலதிட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 15 Aug 2020 10:00 PM GMT (Updated: 16 Aug 2020 1:28 AM GMT)

நாகையில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ரூ. 95¾ லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை கலெக்டர் பிரவீன்நாயர் வழங்கினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று 74-வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக விழாக்கோலம் இன்றி எளிமையாக நடத்தப்பட்ட இந்த விழாவுக்கு கலெக்டர் பிரவீன்நாயர் தலைமை தாங்கி கொடியேற்றினார்.

தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினத்துடன் ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து 85 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டோர் தங்குவதற்கான இடவசதி அளித்த நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்விக்குழும செயலாளர் பரமேஸ்வரன் உள்பட மொத்தம் 124 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் பிரவீன்நாயர் வழங்கினார்.

தொடர்ந்து, வருவாய்த்துறை சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கஜா புயலில் காயமடைந்தவர்களுக்கான நிதியுதவியாக 4 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 86 ஆயிரத்து 900 மதிப்பிலான காசோலைகளும், 6 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும்,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.65 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக்கூடிய சக்கர நாற்காலி, 2 பயனாளிகளுக்கு தலா ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக்கூடிய மூன்று சக்கர சைக்கிள், மீன்வளத்துறை சார்பில் நீலப்புரட்சித் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 48, ஆயிரத்து 551 மதிப்பிலான எந்திரங்கள் உள்பட மொத்தம் 85 பயனாளிகளுக்கு ரூ.95 லட்சத்து 85 ஆயிரத்து 695 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் கலாநிதி, உதவி கலெக்டர்கள் தீபனாவிஸ்வேஸ்வரி, அபிநயா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story