வேலூர் மாவட்டத்தில் ரெயில்வே ஊழியர், வியாபாரிகள் உள்பட 152 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,260 ஆக உயர்ந்தது


வேலூர் மாவட்டத்தில் ரெயில்வே ஊழியர், வியாபாரிகள் உள்பட 152 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,260 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 16 Aug 2020 7:17 AM IST (Updated: 16 Aug 2020 7:17 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே ஊழியர், வியாபாரிகள் உள்பட 152 பேர் ஒரேநாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,260 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர், 

வேலூர் மெயின் பஜார் கடை வியாபாரிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வந்தது. அதில், 2 வியாபாரிகளுக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கடைகள் மூடப்பட்டன. வியாபாரிகளின் குடும்பத்தினர், கடையில் பணிபுரிந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலைய ஊழியருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறி காணப்பட்டது. அவரின் சளிமாதிரி பரிசோதனையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

8,260 பேருக்கு தொற்று உறுதி

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர், நர்சுகள், ஊழியர்கள் உள்பட 15 பேருக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் வேலூரில் உள்ள விடுதியில் தங்கியிருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த 6 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களும் அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அதைத்தவிர பென்னாத்தூரில் 3 வயது பெண்குழந்தை, சாய்நாதபுரத்தில் 5 வயது பெண்குழந்தை, குமரன்நகரில் 82 வயது முதியவர், மாநகராட்சி பகுதியில் 90 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 152 பேர் ஒரேநாளில் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 8,260 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், திமிரி பகுதிகளை சேர்ந்த மொத்தம் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,253 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story