74-வது சுதந்திர தினவிழா: வேலூரில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார் கொரோனா தொற்று தடுப்பு பணியாளர்கள் கவுரவிப்பு
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தேசிய கொடி ஏற்றி கொரோனா தொற்று தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
வேலூர்,
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவையொட்டி வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வேலூர் கோட்டை நுழைவு வாயில் அருகேயுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழாவிற்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி காலை 8.55 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு, திறந்தவெளி ஜீப்பில் வந்து போலீசார் அணிவகுப்பை பார்வையிட்டார்.
பாராட்டு சான்றிதழ்
விழாவில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய அலோபதி, சித்த டாக்டர்கள், சுகாதார அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆகியோருக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். பின்னர் தாட்கோ மூலம் 2 பேருக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் 2 பேருக்கு வீட்டுமனை பட்டா ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக சுதந்திர தினவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று வழக்கமாக நடைபெறும் பலூன், புறாக்கள் பறக்க விடும் நிகழ்ச்சி, சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுகள் கவுரப்படுத்தும் நிகழ்ச்சி, மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், போலீசாரின் வீரதீர நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இந்தாண்டு நடைபெறவில்லை.
சுதந்திர தினவிழா சுமார் ½ மணி நேரத்தில் நிறைவு பெற்றது. விழாவில் பங்கேற்ற அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர்.
விழாவில் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி, சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், மருத்துவ பணிகள் இணைஇயக்குனர் யாஸ்மின், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் பானு, முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி அலுவலகம்
வேலூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகர்நல அலுவலர் சித்ரசேனா தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில், வேலூர் எம்.எல்.ஏ. ப.கார்த்திகேயன், உதவி கமிஷனர்கள் மதிவாணன், வெங்கடேசன், செந்தில்குமார், பிரபு, இளநிலை பொறியாளர் சீனிவாசன், சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story