அமெரிக்காவின் பொருளாதார அடிமைத்தனத்தில் இருந்து இந்தியாவை மோடி விடுவிக்க வேண்டும் - திருச்சியில் தா.பாண்டியன் பேட்டி


அமெரிக்காவின் பொருளாதார அடிமைத்தனத்தில் இருந்து இந்தியாவை மோடி விடுவிக்க வேண்டும் - திருச்சியில் தா.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 16 Aug 2020 4:00 AM IST (Updated: 16 Aug 2020 8:44 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவின் பொருளாதார அடிமைத்தனத்தில் இருந்து இந்தியாவை மோடி விடுவிக்க வேண்டும் என தா.பாண்டியன் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி,

இந்தியாவில் சுதந்திர போராட்ட காலத்திலும் துரோகிகள் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். வெளிநாட்டு விரோதிகளை விட உள்நாட்டு துரோகிகள் ஆபத்தானவர்கள். நம் நாட்டு மக்களை பிளவு படுத்துவது, பிரிவு படுத்துவது, இழிவு படுத்துவது, சுரண்டுவது இன்னும் நடக்கிறது.

130 கோடி மக்களை கொண்ட சீனாவுக்கு மனித பலம் உள்ளது. இன்றைய உலகத்தில் மனித பலம் மிகமுக்கியம். தங்கம், வெள்ளி அல்ல. அந்த நாட்டுக்கு ஈடாக இந்தியா உள்ளது. ஆனால், 35 கோடி மக்களை கொண்ட அமெரிக்கா சுயநலம் என்ற பெயரில் பொருளாதாரத்தில் இந்தியாவை அடிமையாக்கி விட்டது. மோடி, அதில் இருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும்.

நாம் கச்சா எண்ணெயை டாலர் கொடுத்து வாங்குவதை என்று நிறுத்துகிறோமோ அப்போதுதான் முன்னேற முடியும். டிரம்ப் உலகத்தையே அழிக்கிறார். மோடி இந்தியாவை அழிக்கிறார். எடப்பாடி நம் தமிழக மக்களை அழிக்கிறார். இந்த மூவரின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத போக்கில் இருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும். அந்த உறுதியை அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். வேளாண்துறைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் நிருபர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

கேள்வி: வருகிற சட்டமன்ற தேர்தலில் கட்சிகளுக்கு இடையேயான போட்டியா? அல்லது சித்தாந்தத்திற்கு இடையேயான போட்டியாக இருக்குமா?

பதில்: கட்சிகளை வைத்து தான் சித்தாந்தம் வரும். பாரதீய ஜனதாவை எதிர்ப்பதில் யார் உறுதியாக இருக்கிறார்களோ, அந்த கட்சிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முழு ஆதரவு உண்டு.

கேள்வி: பா.ஜ.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையேதான் போட்டி என வி.பி.துரைசாமி சொல்லியது பற்றி?

பதில்: அவர் விருப்பத்தை சொல்லி இருக்கிறார்.

கேள்வி: அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்ற போட்டி நிலவுவது பற்றி?

பதில்: முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமி ஆரோக்கியமாக இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறார். எனவே, அடுத்த முதல்-அமைச்சர் யார்? என்று இப்போது பேசுவது நாகரிகம் அல்ல.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக திருச்சி மிளகுபாறையில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் தா.பாண்டியன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் திராவிட மணி, புறநகர் மாவட்ட செயலாளர் இந்திரஜித், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story