பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சுதந்திர தின விழாவில் கலெக்டர்கள் கொடியேற்றினர்


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சுதந்திர தின விழாவில் கலெக்டர்கள் கொடியேற்றினர்
x
தினத்தந்தி 15 Aug 2020 10:15 PM GMT (Updated: 16 Aug 2020 3:20 AM GMT)

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நடந்த சுதந்திர தின விழாவில், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

பெரம்பலூர், 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய-மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நாடு முழுவதும் நேற்று 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் சாந்தா தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் சாந்தா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து கலெக்டர் சாந்தா திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பினை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளைபுறாக்களையும், தேசியகொடி நிறத்திலான பலூன்களையும்பறக்கவிட்டனர்.

பின்னர் கலெக்டர் சாந்தா கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் என 77 பேருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார். அதேபோல் 20 ஆண்டுகளாக விபத்தில்லாமல் அரசு வாகனத்தை ஓட்டி வரும் 6 டிரைவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழையும் அவர் வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்டி, முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் அரியலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா, அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் கலெக்டர் ரத்னா தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் ரத்னா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து கலெக்டர் ரத்னா திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பினை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்களையும், தேசிய கொடி நிறத்திலான பலூன்களையும் பறக்கவிட்டனர். பின்னர் கலெக்டர் ரத்னா கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் என 48 பேருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டினார். பின்னர், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகளை கலெக்டர் நட்டார். விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்னூலாப்தீன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் கண்மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள், தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழாவையொட்டி நேற்று தேசிய கொடியேற்றப்பட்டது. பெரம்பலூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினத்தையொட்டி முதன்மை அமர்வு நீதிபதி சுபாதேவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையரும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவரும், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஊராட்சி தலைவர்களும் தேசிய கொடியினை ஏற்றி வைத்தனர்.

Next Story