மேலூர் அருகே, தே.மு.தி.க. பிரமுகர் பட்டப்பகலில் படுகொலை - மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்து வெறிச்செயல்


மேலூர் அருகே, தே.மு.தி.க. பிரமுகர் பட்டப்பகலில் படுகொலை - மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்து வெறிச்செயல்
x
தினத்தந்தி 16 Aug 2020 3:45 AM IST (Updated: 16 Aug 2020 8:56 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே தே.மு.தி.க. பிரமுகர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்து மர்ம கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது. இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரை சேர்ந்தவர், செந்தில்பாண்டி (வயது 43). தே.மு.தி.க. பிரமுகரான இவர் மேலூர் யூனியன் முன்னாள் கவுன்சிலராக பதவி வகித்தவர். இவர் திருவாதவூரில் இருந்து மேலூர் நோக்கி நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

அப்போது ஆண்டிபட்டி என்னும் இடத்தில் திடீரென வழிமறித்த ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக செந்தில்பாண்டியை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் தலை சிதைந்த நிலையில் சாய்ந்த செந்தில்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். செந்தில் பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

படுகொலை செய்யப்பட்ட செந்தில்பாண்டி தே.மு.தி.க. சார்பாக 2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மேலூர் யூனியன் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது தம்பி முருகன் என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவாதவூரில் இதேபோன்று ஒரு கும்பல் கொலை செய்தது. தம்பியை போலவே அண்ணனும் தற்போது பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டு உள்ளதால் முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலைசெய்யப்பட்ட செந்தில்பாண்டி கஞ்சா கடத்தல், கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது.

இவருக்கும் மதுரையில் உள்ள கும்பல் ஒன்றுக்கும் முன்பகை காரணமாக ஏற்கனவே பல்வேறு மோதல்களும், இருதரப்பிலும் கொலை சம்பவங்கள் நடந்துள்ளதால் அதன் காரணமாக இந்த கொலை பழிக்குபழியாக நடந்துள்ளதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி, கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பார்வையிட்டார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story