பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர்,
ஈரோடு மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக பவானிசாகர் அணையாக உள்ளது. இதன் மொத்த நீர்பிடிப்பு உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது.
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 9-ந் தேதி பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து கீழ்பவானி அணையில் இருந்து பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் வழியாக முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி நேற்று முன்தினம் காலை அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 1,934 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது.
நேற்று மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 548 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 101.99 அடியாக இருந்தது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும், காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 600 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.
Related Tags :
Next Story