நாகர்கோவிலில் சுதந்திர தினவிழா: கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் - கொரோனா பணியில் சிறப்பாக செயல்பட்ட 351 பேருக்கு சான்றிதழ்


நாகர்கோவிலில் சுதந்திர தினவிழா: கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் - கொரோனா பணியில் சிறப்பாக செயல்பட்ட 351 பேருக்கு சான்றிதழ்
x
தினத்தந்தி 16 Aug 2020 6:16 AM GMT (Updated: 16 Aug 2020 6:26 AM GMT)

நாகர்கோவிலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசியக்கொடி ஏற்றி வைத்து 351 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

நாகர்கோவில்,

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களில் நேற்று தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதே போல குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு போலீசாரின் கம்பீரமான அணிவகுப்பு தொடங்கியது. இந்த அணிவகுப்பை கலெக்டர் பிரசாந்த் வடநேரே திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனும் உடன் இருந்தார். பின்னர் சமாதானத்தை வலியுறுத்தும் மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார்.

அதன்பிறகு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார். அந்த வகையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.17 ஆயிரம் மதிப்பிலும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பிலும், தோட்டக்கலை துறையின் கீழ் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து தற்போது பெரும் பிரச்சினையாக உள்ள கொரோனா வைரசை தடுக்க சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 351 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதாவது போலீஸ் துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்டவற்றில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார். அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட வரிசையில் சமூக இடைவெளி விட்டு நின்று சான்றிதழை வாங்கி சென்றனர். அப்போது பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அரியும் பாராட்டு சான்றிதழ் பெற்றார்.

இந்த சுதந்திர தின விழாவில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தன் மனைவி அஸ்வினியுடன் கலந்து கொண்டார். மேலும் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஜாண்சிலின் விஜிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வழக்கமாக போலீசாரின் அணிவகுப்பில் ஏராளமான போலீசார் கலந்து கொள்வார்கள். ஊர்க்காவல் படை, என்.சி.சி. மாணவர்களும் அணிவகுப்பில் கலந்து கொள்வார்கள். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக அணிவகுப்பில் குறைவான போலீசாரே கலந்து கொண்டனர். அதோடு ஊர்க்காவல் படை வீரர்களும், என்.சி.சி. மாணவர்களும் கலந்து கொள்ளவில்லை. எனவே விழாவானது மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.

சுதந்திர தின விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும், நேற்று காலை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் விழா நிறைவடையும் வரை சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story