குமரியில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலி


குமரியில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 16 Aug 2020 12:00 PM IST (Updated: 16 Aug 2020 11:49 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,359 ஆக உயர்ந்துள்ளது.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இதேபோல குமரி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் மள மள வென உயர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் 60 வயதுக்கு மேற்பட்டோர் அதிகமான அளவில் இறந்து வருகிறார்கள்.

நேற்று ஒரே நாளில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 105 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தார்கள். அவர்களில் 48 பேர் ஆண்கள், 51 பேர் பெண்கள், 6 பேர் சிறுவர்கள் ஆவர். இதனால் குமரி மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,359 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 129 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தார்கள். இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 4 பேர் இறந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த 83 வயது முதியவர், கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 94 வயது முதியவர், அருமனை மாத்தூர் கோணத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்.

நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாத்தூர் அருகில் உள்ள அருவிக்கரையைச் சேர்ந்த 79 வயது மூதாட்டியும் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதனால் ஒரே நாளில் 4 பேர் இறந்துள்ளனர். நேற்று இறந்த 4 பேருமே முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.

Next Story