சுதந்திர தின விழா: கொரோனா தடுப்பு முன்களப்பணியாளர்களுக்கு கேடயம் கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்
திருப்பூர் மாவட்ட சுதந்திர தின விழாவில் கொரோனா தடுப்பு முன்களப்பணியாளர்களுக்கு கேடயம் வழங்கி கலெக்டர் விஜயகார்த்திகேயன் பாராட்டி கவுரவித்தார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா நேற்று காலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் காலை 8.50 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார்.
இதைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகர போலீஸ் உதவி கமிஷனர்கள் நவீன்குமார் (திருப்பூர் தெற்கு), ஜனார்த்தனன்(மாவட்ட குற்ற ஆவணப்பிரிவு), தங்கம்(கட்டுப்பாட்டு அறை), நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் உள்பட மொத்தம் 40 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். இதுபோல் மாவட்ட காவல்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கர்(அவினாசி), ஜெயராம்(தாராபுரம்), தனராசு (காங்கேயம்), இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 30 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பின்னர் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி கவுரவித்தார். அதன்படி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் வள்ளி, அரசு மருத்துவமனை சூப்பிரண்டு கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 31 பேருக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித்துறையில் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் உள்பட 50 பேருக்கும், பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறையில் 33 பேருக்கும், மாநகராட்சி நிர்வாகத்தில் 60 பேருக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் 70 பேருக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 12 பேருக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையில் 12 பேருக்கும், பேரூராட்சி நிர்வாகத்தில் 4 பேருக்கும், கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஓமியோபதி மாத்திரைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கிய திருப்பூர் ஓமியோபதி டாக்டர் கிங் உள்ளிட்ட தன்னார்வலர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர் 7 பேருக்கும் என மொத்தம் 279 பேருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் எந்திரம், சலவைப்பெட்டி, வேளாண்மைத்துறை சார்பில் ரோட்ட வேட்டர், தோட்டக்கலைத்துறை, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம் ஆகிய துறை சார்பில் மொத்தம் 15 பேருக்கு ரூ.3 கோடியே 67 லட்சத்து 64 ஆயிரத்து 397 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், தியாகிகளின் வாரிசுகளை கவுரவித்தல் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. அதுபோல் விழாவில் பொதுமக்கள் யாரும் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், செல்வக்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, திட்ட இயக்குனர் ருபன்சங்கர்ராஜ், தனியரசு எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்தியபாமா, தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், திருப்பூர் ஆர்.டி.ஓ. கவிதா, உடுமலை ஆர்.டி.ஓ. ரவிக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story