தற்கொலை நாடகத்துக்காக உடலை மரத்தில் தொங்க விட்டார்: திருமணத்துக்கு மறுத்த பெண்ணை கொன்ற டிரைவர் கைது


தற்கொலை நாடகத்துக்காக உடலை மரத்தில் தொங்க விட்டார்: திருமணத்துக்கு மறுத்த பெண்ணை கொன்ற டிரைவர் கைது
x
தினத்தந்தி 17 Aug 2020 12:58 AM IST (Updated: 17 Aug 2020 12:58 AM IST)
t-max-icont-min-icon

திருமணத்திற்கு மறுத்ததால் பெண்ணை கொன்று மரத்தில் தொங்க விட்ட டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தானே, 

மும்பை-நாசிக் நெடுஞ்சாலை பிவண்டி பகுதியில் கடந்த 9-ந் தேதி அங்குள்ள மரத்தில் ஒரு பெண்ணின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தூக்கில் பிணமாக கிடந்தவர் கல்யாணை சேர்ந்த 24 வயதுயுடைய திருமணமான பெண் எனவும், வீட்டு வேலை செய்து வந்த அவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அப்பெண் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்க விடப்பட்டதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது.

டிரைவர் கைது

இது தொடர்பாக போலீசார் அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில் கல்யாண் கோவிந்த்வாடியை சேர்ந்த தீபக்(31) என்ற வாலிபர் அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. டிரைவராக பணிபுரிந்து வந்த அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் இவரும் திருமணம் ஆனவர் என்று தெரியவந்தது.

தீபக், கணவரை பிரிந்து வாழும் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்து உள்ளார்.

இதற்கு மறுத்ததால் அப்பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் தற்கொலை செய்து கொண்டது போல சித்தரிக்க உடலை மரத்தில் தொங்கவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக்கை கைது செய்தனர்.

Next Story