வன்முறை சம்பவம் எதிரொலி பெங்களூருவில் 3 பகுதிகளில் 144 தடை நீட்டிப்பு போலீஸ் கமிஷனர் உத்தரவு


வன்முறை சம்பவம் எதிரொலி பெங்களூருவில் 3 பகுதிகளில் 144 தடை நீட்டிப்பு போலீஸ் கமிஷனர் உத்தரவு
x
தினத்தந்தி 17 Aug 2020 2:23 AM IST (Updated: 17 Aug 2020 2:23 AM IST)
t-max-icont-min-icon

வன்முறை சம்பவம் எதிரொலியாக பெங்களூருவில் 3 இடங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) வரை 144 தடையை நீட்டித்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு புலிகேசிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அகண்ட சீனிவாசமூர்த்தி. இவரது உறவினர் நவீன் தனது முகநூல் பக்கத்தில் சிறுபான்மை சமுதாயத்தினர் குறித்து பதிவிட்ட அவதூறு கருத்தால் கடந்த 11-ந் தேதி இரவு பெங்களூரு டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல் பைரசந்திரா ஆகிய பகுதிகளில் வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க பெங்களூரு நகர் முழுவதும் கடந்த 15-ந் தேதி(நேற்று முன்தினம்) 144 தடை உத்தரவும், கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் காவல் பைரசந்திராவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு இருந்தது.

144 தடை உத்தரவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையுடன் பெங்களூருவில் அமல்படுத்தப்பட்டு இருந்த 144 தடை உத்தரவும், 3 இடங்களில் அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கும் நிறைவு பெற்றது. இந்த நிலையில் நேற்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி, காவல் பைரசந்திரா பகுதிகளில் இன்று(அதாவது நேற்று) முதல் வருகிற 18-ந் தேதி(நாளை) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொது இடங்களில் 2 நபர்களுக்கு மேல் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுக்கூட்டங்கள் நடத்தவும், ஆயுதங்களை எடுத்து செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.


Next Story