சுதந்திர தின விழாவில், போலீஸ் மோப்ப நாய்க்கு பாராட்டு மந்திரி பைரதி பசவராஜ் சால்வை அணிவித்தார்


சுதந்திர தின விழாவில், போலீஸ் மோப்ப நாய்க்கு பாராட்டு மந்திரி பைரதி பசவராஜ் சால்வை அணிவித்தார்
x
தினத்தந்தி 17 Aug 2020 2:47 AM IST (Updated: 17 Aug 2020 2:47 AM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கியால் சுட்டு வாலிபரை கொன்ற குற்றவாளிகளை, 11 கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று காட்டிக்கொடுத்த போலீஸ் மோப்ப நாய்க்கு, சுதந்திர தின விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அப்போது விழாவில் கலந்து கொண்ட மந்திரி பைரதி பசவராஜ், அந்த மோப்ப நாய்க்கு சால்வையும், மாலையும் அணிவித்து பாராட்டினார்.

பெங்களூரு,

தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா சூளுகெரே கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கும்பல், வாலிபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸ் மோப்ப நாய் காட்டிக் கொடுத்தது. அதாவது சம்பவம் நடந்த இடத்தில் மோப்பம் பிடித்த போலீஸ் மோப்ப நாய், சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று குற்றவாளிகளை பிடித்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்ததில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

அது முதல் அந்த போலீஸ் மோப்ப நாயை பலரும் பாராட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தாவணகெரேவில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில்...

அந்த சந்தர்ப்பத்தில் போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய அந்த மோப்ப நாய்க்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அப்போது விழாவில் கலந்து கொண்டிருந்த மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி பசவராஜ், அந்த போலீஸ் மோப்ப நாய்க்கு சால்வையும், மாலையும் அணிவித்து பாராட்டினார். தற்போது அதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரின் பாராட்டையும் பெற்று வருகின்றன. 

Next Story