மண்ணாடிப்பட்டில் வீடு முன் மர்மப் பொருள் வெடித்து சிதறியதால் பரபரப்பு வெடிகுண்டா? போலீசார் விசாரணை


மண்ணாடிப்பட்டில் வீடு முன் மர்மப் பொருள் வெடித்து சிதறியதால் பரபரப்பு வெடிகுண்டா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 Aug 2020 3:38 AM IST (Updated: 17 Aug 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

மண்ணாடிப்பட்டில் மர்மபொருள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. வெடித்தது வெடிகுண்டா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

திருக்கனூர்,

திருக்கனூரை அடுத்த மண்ணாடிப்பட்டு அருகே பெரியகாலனியில் அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகள் பயனாளிகளிடம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. ஆனால் அதில் ஒரு வீட்டில் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி அங்கம்மாள் (வயது 75) என்பவர் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று காலை வீட்டு வாசலை தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தபோது அங்கு பந்து போல் கிடந்த ஒரு மர்ம பொருளை அங்கம்மாள் மிதித்துவிட்டார். அப்போது அந்த மர்மபொருள் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அவருக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

வெடிகுண்டு?

பயங்கர சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். வெடிகுண்டு ஏதேனும் வெடித்து இருக்கலாம் என அச்சமடைந்தனர். காயமடைந்த மூதாட்டிக்கு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்து மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், திருக்கனூர் இன்ஸ்பெக்டர் கிட்லா சத்தியநாராயணா, சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மப் பொருள் வெடித்து சிதறிக் கிடந்த இடத்தில் இருந்து அதன் துகள்களை சேகரித்தனர். அந்த துகள்களை ஆய்வு செய்து வெடிகுண்டா அல்லது எந்த வகையை சேர்ந்தது என்பதை அறிய பரிசோதனைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

நேற்று காலையில் பயங்கர சத்தத்துடன் மர்மபொருள் வெடித்த சம்பவம் மண்ணடிப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story