போலீஸ் நிலைய வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி 5-வது முறையாக தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் - பட்டுக்கோட்டையில் பரபரப்பு
பட்டுக்கோட்டையில் போலீஸ் நிலைய வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி 5-வது முறையாக வாலிபர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டுக்கோட்டை,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது35). பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இவர் தனக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி நேற்று காலை 11.45 மணி அளவில் பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள 250 அடி உயரம் கொண்ட போலீஸ் வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது தனக்கு மீண்டும் பணி வழங்கும் வரை கீழே இறங்கி வரமாட்டேன் என மணிகண்டன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று மணிகண்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர் மதியம் 1.45 மணி அளவில் வயர்லெஸ் கோபுரத்தை விட்டு கீழே இறங்கி வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர் இதற்கு முன்பாக இதேபோல் 4 முறை வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து இருப்பதாகவும், நேற்று 5-வது முறையாக தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் நிலையம் அருகே பஸ் நிலையம், ஒன்றிய அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இதனால் அந்த பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் போலீஸ் நிலைய வயர்லெஸ் கோபுரத்தில் ஆட்கள் ஏறி பல்வேறு கோரிக்கைகளுக்காக தற்கொலை மிரட்டல் விடுப்பது வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்க கோபுரத்தை சுற்றி இரும்பு வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story