பெரம்பலூரில், கொரோனாவுக்கு முதியவர் பலி; மேலும் 42 பேர் பாதிப்பு - அரியலூரில் ஒரே நாளில் 77 பேருக்கு தொற்று


பெரம்பலூரில், கொரோனாவுக்கு முதியவர் பலி; மேலும் 42 பேர் பாதிப்பு - அரியலூரில் ஒரே நாளில் 77 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 16 Aug 2020 11:00 PM GMT (Updated: 17 Aug 2020 1:23 AM GMT)

பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார். மேலும் மாவட்டத்தில் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த, பெரம்பலூர் பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை பெரம்பலூர் மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் பெரம்பலூரில் அரசு வழிக்காட்டுதலின்படி அடக்கம் செய்தனர். அந்த அமைப்பின் மனிதாபிமான செயலை பொதுமக்கள், அரசு அதிகாரிகள் பாராட்டினர். மேலும் சிறுவாச்சூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த 53 வயது ஆண், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழகத்திலேயே குறைந்த அளவை கொண்ட மாவட்டமாக பெரம்பலூர் இடம் பெற்றுள்ளது. ஆனால் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி விட்டது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பெரம்பலூர் வட்டாரத்தில் 17 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 6 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 12 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 7 பேரும் என மொத்தம் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 931 ஆக உயர்ந்துள்ளது. இதில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மொத்தம் 712 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ ஆன நிலையில், தற்போது 208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 74 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 13 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 15 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 9 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 19 பேருக்கும் என மொத்தம் 77 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,792 ஆக உயர்ந்துள்ளது. இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 1,279 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிஉள்ளனர். தற்போது 496 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 220 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது.

Next Story