மாவட்டத்தில், முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு: வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
கரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைப் பிடிக்கப்பட்டது. அதை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்தனர்.
கரூர்,
கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கடந்த மாதத்தைபோல் இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி இந்த மாதத்தின் 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி கரூர் மாவட்டத்தில் கோவை ரோடு, ஜவகர்பஜார், மார்க்கெட், பசுபதிபாளையம், பழைய பை-பாஸ் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள், நகைக்கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், உழவர்சந்தை உள்பட அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. நகர பகுதிகளில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனங்கள், கொசுவலை நிறுவனங்கள், பஸ் கூண்டு கட்டும் தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சுங்ககேட், திருமாநிலையூர், லைட்ஹவுஸ், கோவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்களில் வந்தவர்களை விசாரித்தும், தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களை எச்சரித்தும் அனுப்பினர். மருந்து கடைகள், அம்மா உணவகம் போன்றவை திறந்திருந்தன.
குளித்தலை பகுதியில் நேற்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஆனால் பல தெருக்களில் வீடுகளுடன் இணைந்து வைக்கப்பட்டுள்ள கடைகளில் விற்பனை நடைபெற்றது. அதுபோன்ற கடைகளுக்கு பொதுமக்களில் பலர் சென்று தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி சென்றனர். பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் குளித்தலை நகரின் முக்கிய பகுதிகளான பஸ் நிலையம், சுங்ககேட், பெரியபாலம் போன்ற பகுதிகளில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் போலீசார் இல்லாத பகுதி வழியாக பொதுமக்கள் பலர் மோட்டார் சைக்கிள்களில் பல இடங்களில் சென்று வந்ததை காண முடிந்தது.
காவிரி ஆற்றுப்பகுதியில் தினமும் குளித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள உள்ளூர்வாசிகளை தவிர, வெளியூர் பகுதியை சேர்ந்த பலரும் நேற்று ஆற்றில் குளித்து சென்றனர். முழு ஊரடங்கை பொதுமக்களில் பலர் ஒரு பொருட்டாக கருதாமலும், கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமலும், வழக்கமான தங்கள் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
நொய்யல் குறுக்குச்சாலை, மரவாபாளையம், புன்னம்சத்திரம், தவுட்டுப்பாளையம், குட்டக்கடை, நன்செய்புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மளிகை கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் தவுட்டுப்பாளையம் அருகே ஓட்டல்கள், பாலத்துறை அருகே உள்ள பேக்கரிகள், வெற்றிலை கடைகள் மறைமுகமாக செயல்பட்டன. சேலம்-கரூர், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் லாரிகளை நிறுத்திவிட்டு, டிரைவர்கள் உள்ளிட்டோர் ஓட்டல்களில் பொட்டலங்களில் உணவு வாங்கி சென்றனர். பேக்கரிகளின் முன்பு சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, கடைக்குள் உணவு பண்டங்களை வாங்கி சென்றதை காணமுடிந்தது.
தேசிய நெடுஞ்சாலைகளிலும், கரூர்- ஈரோடு, ஈரோடு- கரூர் வழித்தடங்களிலும் ஏராளமான லாரிகள் பாரங்களுடனும், பாரமின்றியும் வந்து சென்றன. கார்கள், வேன்கள், சரக்கு ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களில் பலர் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு தடையின்றி சென்றனர். இதில் பலர் இ-பாஸ் இல்லாமல் சென்றதாக கூறப்படுகிறது. நொய்யல், தவுட்டுப்பாளையம் சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு இல்லை. மேலும் முத்தனூர், நொய்யல், நத்தமேடு, புன்னம்சத்திரம் பகுதிகளில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்படவில்லை. தவுட்டுப்பாளையம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காத நிலையில் வாகன போக்குவரத்து இருந்தது.
Related Tags :
Next Story