சென்னையில் நாளை மதுக்கடைகள் திறப்பு ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் வழங்கப்படும்


சென்னையில் நாளை மதுக்கடைகள் திறப்பு ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் வழங்கப்படும்
x
தினத்தந்தி 17 Aug 2020 7:12 AM IST (Updated: 17 Aug 2020 7:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை விற்பனை நடைபெறும் என்றும், ஒரு கடையில் ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை, 

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் உள்ள 5,330 டாஸ்மாக் மதுக்கடைகளும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி இரவுடன் மூடப்பட்டன.

ஊரடங்கு தளர்வுகள்

அதன்பின்னர், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல் துறை எல்லைக் குட்பட்ட பகுதிகளில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்படாமல், தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

அதாவது, 43 நாட்களுக்கு பிறகு மே மாதம் 7-ந் தேதி, சென்னையை தவிர்த்து, தமிழகத்தில் 4,550 டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே ரூ.170 கோடிக்கும், 2-வது நாளில் (மே 8-ந் தேதி) ரூ.140 கோடிக்கும் மது வகைகள் விற்பனையாயின. அதாவது, பண்டிகை கால மது விற்பனை சாதனையை இந்த 2 நாள் விற்பனை முறியடித்தது.

சென்னை நகர மதுக்கடைகள்

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி உள்ளிட்ட ஐகோர்ட்டின் நிபந்தனைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி, மதுக்கடைகளை மே மாதம் 9-ந் தேதி முதல் மீண்டும் மூட உத்தரவிடப்பட்டது.

அதன்பின்னர், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில், மே மாதம் 16-ந் தேதி முதல் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

ஆனால், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 800 மதுக்கடைகள் மட்டும் திறக்கப்படாமலேயே இருந்தது.

இந்த நிலையில், கடந்த வார இறுதியில், சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தகவல் ஒன்று சென்றது. அதாவது, உடனடியாக அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால், ஓரிரு நாட்களில் மதுக்கடைகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நாளை முதல் திறப்பு

இந்த நிலையில், சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை (செவ்வாய்கிழமை) முதல் திறக்கப்படும் என்று நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர மதுபான சில்லரை விற்பனை கடைகள் 7-5-2020 முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபான கடைகள் திறக்கப்பட்டன. சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லரை விற்பனை கடைகள் 18-8-2020 (நாளை) முதல் இயங்கும்.

500 டோக்கன்கள்

மேலும், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் மதுபான கடைகள் இயங்காது.

மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபான கடைகளுக்கு வரும் அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மற்றும் தனி மனித இடைவெளி கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

புதிதாக வருகிறது

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகள் சுமார் 5 மாதங்களாக மூடப்பட்டு இருப்பதால், அந்த கடைகளில் இருந்த மது பாட்டில்கள் காலாவதியாகிவிட்டன. எனவே, அந்த மது பாட்டில்கள் எல்லாம் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்டு, தற்போது கடைகள் காலியாகவே உள்ளன.

எனவே, இந்த கடைகளுக்கு இன்று (திங்கட்கிழமை) மது வகைகள் புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்றன. மேலும், டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்குவதற்காக முக கவசம், கையுறை, கிருமிநாசினி ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு

கடந்த நிதி ஆண்டான 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரையில், தமிழக அரசுக்கு மது விற்பனை மூலம் ரூ.33 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைத்து இருந்தது. பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் மதுபான விலைகள் உயர்த்தப்பட்டதின் காரணமாக இந்த நிதி ஆண்டில் வரி வருவாய் ரூ.38 ஆயிரம் கோடி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கொரோனா ஊரடங்கினால், தமிழக அரசுக்கு இந்த வரி வருவாயில் ரூ.6 ஆயிரம் கோடி பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

Next Story