தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு: திருச்சியில் வெறிச்சோடிய சாலைகள் - விதிமீறி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கையொட்டி திருச்சியில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. விதிமீறி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
திருச்சி,
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆகஸ்டு மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி இந்த மாதத்தில் 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
திருச்சி மாநகரில் மக்கள் நடமாட்டத்துடன் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெயின்கார்டுகேட், என்.எஸ்.பி.ரோடு, பெரியகடைவீதி, பாலக்கரை, காந்திமார்க்கெட், பாலக்கரை, தலைமை தபால்நிலையம், ஜங்ஷன், உறையூர், தில்லைநகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
நேற்று முன்தினம் சுதந்திரதினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக நேற்றும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரு சில பகுதிகளில் உள்ள தெருக்களில் வாலிபர்கள் சிலர் சாலையோரம் பூட்டி இருந்த கடைகளின் முன்பு கூட்டமாக அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.
அவ்வப்போது ரோந்து போலீசார் வாகனத்தில் சென்று கூட்டம், கூட்டமாக நின்றவர்களை கலைந்து செல்லும்படி மைக் மூலம் எச்சரிக்கை செய்து அப்புறப்படுத்தினர். மேலும், மாநகரில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சென்ற இளைஞர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர். முழு ஊரடங்கையொட்டி மாநகரின் முக்கிய சாலைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதுபோல் மாவட்டத்தில் மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி, லால்குடி, துறையூர், தொட்டியம், முசிறி, தா.பேட்டை, சமயபுரம், மண்ணச்சநல்லூர் போன்ற பகுதிகளில் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் மண்ணச்சநல்லூரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப் படும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடியில் போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story