நெல்லையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
நெல்லையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நெல்லை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க. வில் யார் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பது குறித்து அமைச்சர்கள் சிலர் சமீபத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து மூத்த அமைச்சர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். தேவையில்லாத கருத்துகளை அமைச்சர்களோ, கட்சி நிர்வாகிகளோ தெரிவித்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால் அ.தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்கள் யாரும் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட முறையில் கருத்து சொல்லக்கூடாது. அப்படி மீறி செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிக்கை விட்டு உள்ளனர்.
ஆதரவு போஸ்டர்
இந்த நிலையில் நெல்லை மாநகர பகுதியான வண்ணார்பேட்டை, நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை பகுதியில் நேற்று காலையில் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் பெயரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
அதில் ‘வேண்டும் எடப்பாடியார், மீண்டும் எடப்பாடியார்‘ என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது. இந்த போஸ்டரில் கட்சி நிர்வாகிகள் புகைப்படமும் இருந்தது. இந்த போஸ்டரால் நெல்லை மாநகர பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் தான் கட்சி நிர்வாகிகள் யாரும் கருத்து சொல்லக்கூடாது என்று கட்சி தலைமை அறிவித்து இருந்த நிலையில் இந்த போஸ்டரை ஒட்டியது யார், அதில் பெயர் போட்டுள்ள நபர் ஒட்டினாரா? அல்லது வேறு யாராவது ஒட்டினார்களா? என்று நெல்லை உளவு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story