ஏரியூர் அருகே, குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை
ஏரியூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி நேற்று 2-வது நாளாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஏரியூர்,
ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சாரஅள்ளி ஊராட்சி செல்லமுடி கிராமத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த 1½ ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தடைபட்டதாக கூறப்படுகிறது. செல்லமுடி கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரியும், ஆழ்துளை கிணறு உடனே அமைக்க வலியுறுத்தியும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி நேற்று 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பென்னாகரம் தாசில்தார் சேதுலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் மற்றும் ஏரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story