தட்டார்மடம் அருகே பயங்கரம்: மதுபோதையில் தகராறு செய்த எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை 2 மகன்கள் கைது


தட்டார்மடம் அருகே பயங்கரம்: மதுபோதையில் தகராறு செய்த எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை 2 மகன்கள் கைது
x
தினத்தந்தி 17 Aug 2020 7:44 AM IST (Updated: 17 Aug 2020 7:44 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே, மதுபோதையில் தகராறு செய்த எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

தட்டார்மடம், 

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உசரத்துகுடியிருப்பு பிராமணவிளை மேலத்தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 48). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி செல்வம் (45). இவர்களுக்கு ஜெகன் (21), சிவா (19) ஆகிய 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது.

ஜெகன், சிவா ஆகிய 2 பேரும் சென்னையில் உள்ள மளிகை கடையில் தொழிலாளர்களாக வேலை செய்தனர். இவர்கள், கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தனர்.

அடித்துக் கொலை

இந்த நிலையில் துரைராஜ் அடிக்கடி மது குடித்துவிட்டு, மனைவி, பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்தார். மேலும் அவர் தன்னுடைய குடும்பத்தினரை விட்டு பிரிந்து, அப்பகுதியில் தனியாக மற்றொரு வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைராஜ் தன்னுடைய மனைவி, மகளிடம் தகராறு செய்தார். அப்போது அவர், அரிவாளை திருப்பி வைத்து மகளை தாக்கினார்.

இதற்கிடையே நேற்று காலையில் அப்பகுதியில் உள்ள தெருக்குழாயில் செல்வம் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது அங்கு மது குடித்து விட்டு போதையில் வந்த துரைராஜ் தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்து தாக்கினார். அப்போது அங்கு வந்த ஜெகன், சிவா ஆகிய 2 பேரும் சேர்ந்து கம்பால் துரைராஜை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

2 மகன்கள் கைது

இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட துரைராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெகன், சிவா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மதுபோதையில் தாயை தாக்கிய தந்தையை மகன்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story