முகநூல் தோழியை சந்தித்த தேனி வாலிபரின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
முகநூல் தோழியை சந்திக்க வந்த தேனி வாலிபரின் கதி என்ற என்று தெரியவில்லை. அவர் பாறைக்குழியில் விழுந்தாரா? என்ற சந்தேகத்தில் பாறை குழி தண்ணீரை போலீசார் வெளியேற்றி தேட உள்ளனர்.
திருப்பூர்,
தேனி மாவட்டம் போடியை அடுத்த காமராஜபுரம் காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் மகன் விக்னேஷ்வரன் (வயது 24). இவர் டிப்ளமோ கேட்டரிங் முடித்து விட்டு, கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் திருப்பூர் பூண்டி ரிங் ரோட்டில் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசிக்கும் 25 வயது பெண் ஒருவருக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளுக்கு நாள் இருவருக்குள்ளும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் விக்னேஷ்வரன் அடிக்கடி திருப்பூருக்கு வந்து அவருடைய முகநூல் தோழியை சந்தித்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஊரடங்கு அமலில் இருந்தபோதும் கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி விக்னேஷ்வரன் தனது தோழியை சந்திப்பதற்காக தேனியில் இருந்து திருப்பூர் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பூண்டி ரிங்ரோட்டில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவர், அங்கு அவருடன் இரவு வரை நீண்ட நேரம் பேசி கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. அதை அக்கம்பக்கத்தினர் பார்த்து விட்டதால் விக்னேஷ்வரன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். ஆனால் அவர் அங்கிருந்து சொந்த ஊரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கும், கோவையில் வேலை செய்யும் ஓட்டலுக்கும் செல்லவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ்வரனுடைய குடும்பத்தினர் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்றிருக்கலாம் என்று பல இடங்களுக்கு சென்று தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து விக்னேஷ்வரனின் சித்தப்பா செல்வபாண்டி, 15வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்து விக்னேஷ்வரன் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் விக்னேஷ்வரன் கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி இரவு திருப்பூரில் உள்ள தோழியை சந்தித்து விட்டு சென்ற பிறகு அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன் பிறகு செல்போன் சிக்னல் எங்கும் காட்டவில்லை. மேலும் விக்னேஷ்வரன் அவருடைய தோழியை வீட்டில் சந்தித்து பேசியதை அக்கம்பக்கத்தினர் பார்த்து விட்டதால், அங்கிருந்து தப்பி ஓடும்போது வீட்டை ஒட்டி உள்ள பாறைக்குழியில் விழுந்தாரா? என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரம் அவருடைய கதி என்ன என்று தெரியவில்லை. இதையடுத்து கடந்த 3 நாட்களாக போலீசார், தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட பாறைக்குழியில் விக்னேஷ்வரனை தேடி வருகின்றனர்.
மேலும் அந்த பாறைக்குழியில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதாலும், சேறும், சகதியுமாகவும் இருப்பதாலும் அங்கு தண்ணீரை வெளியேற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story