தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கால் கடைகள் அடைப்பு: மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் எல்லைகளில் கண்காணிப்பு தீவிரமாக இருந்தது.
மதுரை,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதனால் சென்னை, மதுரை உள்பட பெரிய நகரங்களில் அனைத்து மளிகை கடைகள், ஓட்டல்கள், துணிக்கடைகள், விளையாட்டு பொருட்கள் விற்பனையகங்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக முக்கிய சாலைகள் தடுப்புகளால் அடைக்கப்பட்டன. இணைப்பு சாலைகளும் மூடப்பட்டன.
அதேபோல் வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டதையும் பார்க்க முடிந்தது.
அத்தியாவசிய தேவைகள் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டன.
ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டதால், மக்கள் வீடுகளில் முடங்கினார்கள்.
குறிப்பாக மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் எல்லைகளில் கண்காணிப்பு தீவிரமாக இருந்தது.
Related Tags :
Next Story