தமிழக அரசு பணிகளை தமிழர்களுக்கே வழங்கக்கோரி - தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு பணிகளை தமிழர்களுக்கே வழங்கக்கோரி கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
தமிழக அரசு பணிகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் தமிழர்களுக்கான ஒன்றிய பணிகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கமலநாதன், இளைஞரணி தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் சிலம்பு சுரேஷ், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் முதுநகர் அடுத்த வசந்தராயன்பாளையம் காந்திசிலை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான செந்தில் தலைமை தாங்கினார். நகர இளைஞரணி செயலாளர் ரத்தினம், தமிழர் படை செயலாளர் ராமு, மாவட்ட வர்த்தக பிரிவு பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர துணை செயலாளர் இளவரசன், ஒன்றிய செயலாளர் ராமன் வாசு உள்பட பலர் கலந்து கொண்டு, வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் அதிக அளவு வேலைவாய்ப்பு வழங்கி வருவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமைகட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story