ஊரடங்கால் வாட்டி வதைத்த வறுமை: சலூன் கடைக்காரர் மனைவியுடன் தற்கொலை


ஊரடங்கால் வாட்டி வதைத்த வறுமை: சலூன் கடைக்காரர் மனைவியுடன் தற்கொலை
x
தினத்தந்தி 17 Aug 2020 10:45 AM IST (Updated: 17 Aug 2020 10:39 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே ஊரடங்கு காரணமாக வறுமை வாட்டியதால், சலூன் கடைக்காரர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சின்னாளபட்டி,

திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டி போஸ்ட் ஆபிஸ் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் தர்மராஜ் (வயது 65). இவர், சின்னாளபட்டி பூஞ்சோலை பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். அவருடைய மனைவி காளியம்மாள் (வயது 54). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. மேலும் உறவினர்களும், அவர்களை சரிவர கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தர்மராஜ், தனது சலூன் கடை மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வீடு மற்றும் கடை வாடகை செலுத்தியது போக, மீதியுள்ள பணத்தை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வந்தார். இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தர்மராஜூவால் சலூன் கடையை திறக்க முடியவில்லை.

ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட பிறகு, அவருக்கு கண் பார்வை சரியாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தர்மராஜ் தனது கடையை திறக்கவில்லை. இதனால் வருமானம் இன்றி அவர் மிகவும் கஷ்டப்பட்டார். வீட்டு வாடகை, கடை வாடகையை கொடுக்க முடியாமல் சிரமப்பட்டார். ஒரு கட்டத்தில் உணவுக்கே வழியின்றி தர்மராஜ்- காளியம்மாள் தம்பதியை வறுமை வாட்டி வதைத்தது.

இதனால் மனமுடைந்த தம்பதியினர் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று வீட்டில் 2 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதற்கிடையே அந்த தம்பதியினருக்கு தினமும் சூப் தயாரித்து கொண்டு வந்து கொடுக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று மாலை வழக்கம் போல் தர்மராஜ் வீட்டிற்கு சென்றார்.

அப்போது அவர்கள் 2 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், அக்கம்பக்கத்தினரை அழைத்தார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா, சின்னாளபட்டி சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் தற்கொலை செய்த தம்பதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தினர். மேலும் இதுதொடர்பாக சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமை வாட்டியதால் சலூன் கடைக்காரர், தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னாளபட்டியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story