கோவையில் முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின


கோவையில் முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 17 Aug 2020 11:00 AM IST (Updated: 17 Aug 2020 10:51 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கையொட்டி நேற்று கோவையில் கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கோவை,

கொரோனா பரவுவதை தடுக்க இந்த மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகள், உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட்டுகள், மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள், டீ கடைகள், ஓட்டல்கள், ஜவுளி கடைகள், நகை கடைகள், செல்போன் விற்பனை கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

கோவையில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு, திருச்சி ரோடு, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடிரோடு உள்ளிட்ட சாலைகள் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. முழு ஊரடங்கால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

அத்தியாவசிய தேவைகளான மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள், பால் விற்பனையகம் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தன. மேலும் ஆட்டோக்கள், வேன்கள் உள்ளிட்ட எந்த வாகனமும் இயக்கப்படவில்லை. மாநகர் முழுவதும் முக்கிய இடங்களில் சோதனை சாவடி அமைத்து 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒரு சிலர் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வந்தனர். அவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் உரிய ஆவணங்களை காண்பித்து சென்றனர். அதுபோன்று தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பிற மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் இன்றி கோவைக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன் திருப்பி அனுப்பி வைத்தனர். சாலைகள் அனைத்தும் வெறிச்சோடியதால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளச்சிங் பவுடர் தூவப்பட்டது. கோவையில் முழு ஊரடங்கு பொது மக்களின் ஒத்துழைப்பால் அமைதியான முறையில் நடைபெற்றதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story